கேபிள் டிவி நிறுவனத்திற்கு ரூ.400 கோடி இழப்பு: புதிய தலைவர் பகீர்
அதிமுக அரசின் தவறான செயல்பாட்டால் கேபிள் டிவி நிறுவனத்திற்கு, ரூ. 400 கோடி இழப்பு என, அரசுகேபிள் டிவி தலைவர் கூறினார்.
தமிழக அரசு கேபிள் டிவி தலைவராக, குறிஞ்சி என்.சிவக்குமாரை, அண்மையில் முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். அதன் பின்னர், இன்று ஈரோட்டிற்கு வருகை தந்த குறிஞ்சி சிவகுமாருக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல், ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, காளிங்கராயன் இல்லத்தில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், குறிஞ்சி என்.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வரின் ஆணைப்படி, கேபிள் டிவிக்கான கட்டணத்தை உயர்த்தாமல் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை ஔிப்பரப்புவதே அரசின் நோக்கம். தமிழகம் முழுவதும் இ-சேவை மையம் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 34 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டன. அதில் தற்போது 26 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே உபயோகத்தில் உள்ளன. மீதமுள்ள 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை காணவில்லை.அதிமுக ஆட்சியின் இந்த தவறான செயல்பாடுகள் காரணமாக, அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.