1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்.எல்.ஏக்கள் வழங்கினர்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 726 பேருக்கு மொத்தம் ரூ.5 கோடியே 53 லட்சத்து 3 ஆயிரத்து 810 மதிப்பில் தங்கமும், உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இதேபோல் 100 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவும், 100 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளும் வழங்கப்பட்டன.

Update: 2021-02-13 17:58 GMT

தமிழக அரசின் சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவியாக தாலிக்கு 8 கிராம் தங்கமும், உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களில் ஏற்கனவே திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா ஈரோடு பழையபாளையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அதிகாரி பூங்கோதை முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 726 பேருக்கு மொத்தம் ரூ.5 கோடியே 53 லட்சத்து 3 ஆயிரத்து 810 மதிப்பில் தங்கமும், உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இதேபோல் 100 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவும், 100 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளும் வழங்கப்பட்டன.

இதில் மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர் சூரம்பட்டி ஜெகதீசன், பெரியார்நகர் பகுதி அவைத்தலைவர் மீன்ராஜா என்கிற ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News