கொரோனா விதிகளை மீறியதாக 22 லட்சம் அபராதம்

Update: 2021-02-09 11:00 GMT

கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ஈரோட்டில் ரூ.22.33 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது பேதமின்றி அனைவரையும் தாக்கியது. இதில் முன்கள பணியாளர்களான போலீசார், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் வந்தால் ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, பெரிய நிறுவனங்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வருவாய்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரத் துறையினர், போலீசார் ஆகியோர் ஒன்றிணைந்து மாவட்டம் முழுவதும் அவ்வப்போது ஆய்வு நடத்தி வந்தனர். இதில் தினமும் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோர் முக கவசம் அணியாமல் வந்து அபராதம் செலுத்தினர். இதே போல் பொது இடங்களில் சமூக இடைவெளி, எச்சில் துப்புவது போன்றவற்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டு அந்த தொகை வசூலிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News