அரசு மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து பணியாற்ற குழு ...

கொரோனா தடுப்பு நடவடிக்கை - இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்....

Update: 2021-05-12 07:45 GMT

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்ற வண்ணம் உள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுமட்டுமில்லாமல் சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் ஈரோட்டில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் நேற்றைய நிலவரப்படி 109 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவை என்ற கட்டாயம் இருந்தது.

ஆனால் சமீபகாலமாக காய்ச்சல் என்று அனுமதிக்கப்படுபவர்கள் மூச்சு விட சிரமமாக இருப்பதாகக் கூறி ஆக்சிஜன் வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப்போல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் விரைவாக ஆக்சிஜன் தயாரிக்கவும், மத்திய அரசிடமிருந்து தேவையான ஆக்சிஜனை பெறவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறியதாவது:- ஈரோடு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகள்தான் அதிகளவில் மருத்துவமனைகளை நாடி வரும் நிலையுள்ளதால் தட்டுப்பாட்டைப் போக்கிட ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும் கொரோனா நோய் ஒழிப்பில் தனியார் மருத்துவமனைகளும் அரசுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்த போதிலும் ஒருங்கிணைப்பதில் மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளையும், அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றிட அரசு ஒரு குழுவை அமைத்து ஒருங்கிணைத்திட வேண்டும்.தனியார் மருத்துவர்களுடன் இணைந்து நோய்த்தொற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுத்திட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News