தேர்தல் விதிகளை மீறியதாக 22 புகார்கள்

Update: 2021-03-09 11:00 GMT

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 22 புகார்கள் வந்துள்ளதாக ஈராேடு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் இயந்திரங்கள் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனையடுத்து இன்று ஈரோடு ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பு அறையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தொகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பணியை இன்று பார்வையிட்ட ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், போலீசார் என 16 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பதட்டமான வாக்குச்சாவடிகள் கடந்த தேர்தலை பொறுத்து முடிவு செய்யப்பட்டு மாவட்டத்தில் 32 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவும் மாறலாம்.

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக நேற்று வரை 22 புகார்கள் பெறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஏழு புகார்கள் வந்துள்ளன.இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கத்திரி மலையை பொறுத்தவரை பொதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்படும். தற்போது வனத்துறை உதவியுடன் வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக 4 ஆயிரத்து 757 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஈரோடு மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News