கேரளா,மகாராஷ்டிரா மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு மாட்டுச் சந்தை வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் கறவை மாட்டு சந்தை மிகவும் புகழ்பெற்றது. இதற்காக கேரளா,தெலுங்கானா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா,போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து இங்கு மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவின் தினசரி பாதிப்பில் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 70 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இரு மாநிலங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில சுகாதார துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக இன்று ஈரோடு கருங்கல்பாளையத்தில் கூடிய மாட்டு சந்தைக்கு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில வியாபாரிகள் ஒருவர்கூட வரவில்லை.பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் வராததால் இன்றைய மாட்டுச்சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது. இன்று மாட்டுச் சந்தைக்கு 400 பசுக்கள், 200 எருமை மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்கு வந்தன. இதில் பசு மாடு ரூ. 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூ. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை விற்பனையானது.
இன்று 80 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இன்று கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான வியாபாரிகளே சந்தைக்கு வந்திருந்தனர். மாடுகள் எண்ணிக்கை அதிகரித்த போதும் வியாபாரிகள் அதிகளவில் வராததால் வியாபாரம் மந்தமாக நடந்தது.