புதுப்பொலிவுடன் காணப்படும் முன்பதிவு மையங்கள்

Update: 2021-02-22 06:30 GMT

ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

ஈரோடு ரயில் நிலையம் வழியாக தினமும் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் ஈரோடு ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும்.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறைந்ததால் சில மாதங்களுக்குப் பிறகு சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் படிப்படியாக ரயில் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. மிக விரைவில் அனைத்து வகையான ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த முன்பதிவு மையங்கள் மூடப்பட்டு முன்புறம் உள்ள தகவல் தெரிவிக்கும் பகுதி டிக்கெட் முன்பதிவு மையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. அதே நேரத்தில் பழைய முன்பதிவு மையம் செயல்பட்ட பகுதி புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மீண்டும் புதுப்பொலிவுடன் முன்பதிவு மையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. பயணிகள் நிற்பதை தவிர்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்ட டூவீலர் ஸ்டாண்ட், கார் பார்க்கிங் போன்ற பகுதிகள் வரும் 24 ம் தேதி முதல் மீண்டும் செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News