ஈரோடு ஜி.ஹெச் ரவுண்டானா பகுதியில் சிக்னல் செயல்பட தொடங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் ஜி.ஹெச் ரவுண்டானா பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. ஈரோடு ஜி.ஹெச். ரவுண்டானாவில் பிரப் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், கே.வி.என் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சவிதா வழியாக பெருந்துறை ரோடு வழியாக கோயமுத்தூர், திருப்பூர், பெருந்துறை செல்லும் வாகனங்கள், நசியனூர் செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதால் இந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படும். இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும். இங்கு சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று வந்தது. இதனால் சில நேரங்களில் விபத்தும் நடந்துள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் டிராபிக் சிக்னல் செயல்பட தொடங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்த்தால் முன்பை விட கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதாவது கே.வி.என் ரோடு, பெருந்துறை ரோடு, பிரப் ரோடு போன்ற பாதையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.வாகன ஓட்டிகளிடம் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் டிராபிக் சிக்னல் செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் ஈரோடு ஜிஹெச் ரவுண்டானா பகுதியில் டிராபிக் சிக்னல் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கே.வி.என் ரோட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.மேலும் இந்தப் பகுதியில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உள்ளதால் ஆம்புலன்ஸ் சென்று வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பிரப் ரோடு, பெருந்துறை ரோடு பகுதிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் பொறுமை இழந்த சில வாகன ஓட்டிகள் அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த பகுதியில் சிக்னல் வேண்டாம் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதியம் முதல் டிராபிக் சிக்னல் அகற்றப்பட்டு மீண்டும் பழைய முறையில் வாகனங்கள் செல்ல தொடங்கியது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.