நாடக கலைஞர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான நாடக கலைஞர்கள் எவ்வித வருமானமின்றி வறுமையால் தள்ளப்பட்டு பசியால் வாடுகின்றனர்.;
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது.ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது குறைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர். தமிழ்நாடு நாடகம் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் நாடக கலைஞர்கள் சிலர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லாத காரணத்தால் மேடை நாடக நடிகர்கள், நடிகைகள், ஒப்பனையாளர், இசையமைப்பாளர்கள், மேடை பணியாளர்கள், நாடக அரங்க அமைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான கலைஞர்கள் எவ்வித வருமானமின்றி வறுமையால் தள்ளப்பட்டு பசியால் வாடுகின்றனர். எங்கள் போன்ற கலைஞர்களுக்கு வேறு எந்த ஒரு தொழிலும் செய்ய தெரியாத காரணத்தால் பல்வேறு இன்னல்கள் அணிவித்து வருகிறோம். ஒரு சிலர் கடன் சுமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் ஜனவரி முதல் பொது நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் கிராமப்புறங்களில் நாடகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள போலீசாரிடம் அனுமதி கோரும்போது அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த பத்து மாத காலமாக பல்வேறு கஸ்டங்கள் அனுபவித்து வரும் இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள்கோரிக்கையில் வலியுறுத்தினர்.