ஈரோட்டில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வன்னியர்களுக்கு 20 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கத்தினர் ஒன்றிணைந்து கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு என 5 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஆலோசனைப்படி இன்று ஆறாவது கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே இன்று மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட பாமக வினர் குவிய தொடங்கினர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாநகர் மாவட்ட பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார்.மாநில துணை தலைவர்கள் பரமசிவம் , வெங்கடாசலம், மாவட்ட செயலாளர்கள் பிரபு, ராசு, மனோகர், ராசு, சசிமோகன், மாநில துணைத்தலைவர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து பாமக.வினர் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து பெருந்துறை ரோடு வழியாக ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.