குழந்தைகள் பாதுகாப்பில் ஈரோடு முன்மாதிரியாக திகழ்கிறது

குழந்தை பாதுகாப்பில் ஒரு முன்மாதிரி மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது. கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு இவை மூன்றிலும் முன்மாதிரியாக ஈரோடு உள்ளது.

Update: 2021-01-12 13:17 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆனந்த் கலந்து கொண்டார். பின்னர் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது ,கொரானா பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கு எத்தகைய செயல்பாடுகள் சய்து முடிக்கப்பட்டுள்ளது, இன்னும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எவ்வகையான வழிமுறைகளைக் கையாண்டார்கள், அவற்றி எவை சிறந்த வழிமுறைகள் என்பதை ஆய்வு செய்துள்ளோம்.

மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் துறை ரீதியாக அறிக்கை அளித்துள்ளனர். குழந்தை பாதுகாப்பில் ஒரு முன்மாதிரி மாவட்டமாக ஈரோடு திகழ்ந்து வருகிறது. கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு இவை மூன்றிலும் முன்மாதிரியாக ஈரோடு உள்ளது

கொரானோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்க இவ்வளவு நாள் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எந்த வகையில் தடுக்கப்பட்டது, எவ்வாறு அவர்களுக்கு நீதி கிடைத்தது, போக்ஸோ சட்ட வழக்குகளில் எவ்வளவு பேருக்கு நீதி கிடைத்தது, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது என்பதையும் விரிவாக கலந்தாய்வில் ஆய்வு செய்யப்பட்டது

கொரோனா காலத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க ஈரோடு மாவட்டம் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பழங்குடியினர் வாழும் இடங்களில் முகாம் நடத்துவது, குழந்தை திருமணம் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர். வருங்காலத்தில் இவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுப்பது, அவர்களை மீட்பது தொடர்பான நிலையான நடவடிக்கை நடைமுறையை தேசிய குழந்தைகள் காப்பகம் வெளியிடவுள்ளது. அதுபோன்று குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து வெகு விரையில் தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் வெளியிடப்படவுள்ளது. அதற்கு முன் களத்தில் உள்ள ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் பல்வேறு மாநிலங்களில் கள அதிகாரிகளைச் சந்தித்து இவற்றை எப்படி செயல்படுத்த முடியும் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்றைய கலந்தாய்வுக் கூட்டம் திருப்திகரமாக இருந்தது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. பதியப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 75 சதவீதம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்கியுள்ளனர். ஒரு குழந்தை பாதிக்கப்பட்டது என்றால் தயவு தாட்சண்யம் இன்றி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமானது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை, மீடியா, சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல்களில் இருந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் உண்மைத்தன்மை அறிந்து 90 சதவீத வழக்குகள் எடுத்துக் கொண்டுள்ளோம். மூன்று மாதத்தில் மட்டும் தேசிய அளவில் ஆணையம் சார்பில் 1600க்கு மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 1450 வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளிடையே போதை மருந்து கலாச்சாரத்தை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒரு குழந்தை பாதிக்கப்பட்டால் எவ்வாறு மீட்பது, யார், யார் அந்த பணியில் ஈடுபடுவது, கலந்தாய்வு கொடுப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகவுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்களுக்காகவே ஒரு குழு அமைத்து செயல்பட வேண்டும் என சில ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள் இல்லை என்று சொல்லலாம். குழந்தைகள் கல்வி, சுகாதாரத்தில் ஈரோடு மாவட்டம் சிறந்து விளங்குகிறது. குழந்தைத் தொழிலாளர்களைத் தடுக்க, கண்காணிக்க சிறு, சிறு குழுக்கள் அமைக்கவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் குழந்தைகள் நல அதிகாரிகள் இருப்பது பெருமைக்குரிய விஷயம். மகளிர் காவல்நிலையங்களில் நான்கு இடங்களில் குழந்தைகள் - காவல்துறை நட்புறவை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News