மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் அல்ல : ஈரோட்டில் ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு "அதிமுகவை நிராகரிக்கிறோம்" என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகின்றார்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் காலை ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரவலசு ஊராட்சி, வி.மேட்டுப்பாளையம் கிராமத்தில் மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலையில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசியதாவது,
கிராம சபை கூட்டம் என்பது மக்களின் குறைகளை போக்குவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண நடத்துவது ஆகும். ஆனால் அதிமுக ஆட்சியில் கிராமசபை கூட்டங்கள் முறையாக நடத்துவதில்லை. திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு பெண்கள் அதிகம் வந்துள்ளனர். எனவே இதை கூட்டம் என்பதை விட கிராம பெண்கள் மாநாடு என்று தான் கூற வேண்டும். நாங்கள் பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்போம் என்பதற்கு அடையாளம்தான் இந்த கூட்டம். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் இது போன்ற கூட்டங்களை நடத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு புதுவையையும் சேர்த்து 39 நாடாளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை கொடுத்தீர்கள். தற்போது கடந்த 23ம் தேதி முதல் காஞ்சிபுரம், வேலூர், கோவை மாவட்டத்தை முடித்துக்கொண்டு தற்போது ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.
இதுவரை நான் கலந்து கொண்ட கிராம சபை கூட்டங்களை எல்லாம் மிஞ்சக்கூடிய அளவில் இந்தக் கூட்டம் உள்ளது. பெண்களிடம் பெரிய மாற்றத்தை பார்க்க முடிகின்றது. பெண்கள் முடிவெடுத்துவிட்டால் சாதித்து காட்டுவிடுவார்கள். இன்னும் நான்கு மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. தேர்தலில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்பதை எங்களை விட பெண்களிடம் தான் அதிக நம்பிக்கையே பார்க்கிறேன். தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக இருக்கிறார். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மக்கள் திமுகவை ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி உள்ளனர்.
ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது பெண்கள், தாய்மார்களுக்கு ஏராளமான திட்டங்களை கலைஞர் செய்து கொடுத்துள்ளார். பெண்களுக்கு சொத்தில் சரிபாதி உரிமை, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, ஆரம்ப பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம், திருமண உதவி தொகை, பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் என பெரிய பட்டியலே போடமுடியும். முதன்முதலில் 1989ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தொடங்கி வைத்தார். பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சுழல் நிதி, கடன் மானியத் தொகை ஆகியவை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது. நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது எனது துறையின் கீழ்தான் மகளிர் சுய உதவிக் குழு ஒப்படைக்கப்பட்டது. சுழல் நிதியை மாவட்டம் வாரியாக சென்று வழங்கினேன். மகளிர் சுய உதவிக்குழுவை சார்ந்த அத்தனை உறுப்பினர்களுக்கும் எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி என் கையால் தான் முழுமையாக சுழல் நிதி வழங்கி விட்டு தான் செல்வேன். சுழல் நிதி முழுமையாக அவர்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதற்காக நானே வழங்கி வந்தேன். அவ்வாறு சுழல்நிதியை வழங்கும் போது பெண்கள் முகத்தில் வரும் அந்த மலர்ச்சியை பார்க்கின்றபோது எனக்கு கால் வலி கூட பெரியதாக தெரிவதில்லை. பெண்களின் முன்னேற்றத்துக்காக அற்புதமான திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி காட்டியவர் நம் கலைஞர். அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் இன்று நம்மிடத்தில் இல்லை என்றாலும், சிலை வடிவாக நம் முன்னால் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அவர் எந்த லட்சியத்தோடு, உணர்வோடு நம்மை பயிற்றுவித்து இந்த அரசியலை நமக்கு கற்றுத் தந்திருக்கிறாரோ அவர் வழியில் நின்று நாமும் நம் கடமை ஆற்றுவோம். அதற்கான உறுதியை எடுத்துக்கொள்வோம்.
கலைஞர் ஆட்சி காலத்தில் ரூ. 7 ஆயிரம் கோடி விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இலவச மின்சாரம் கொண்டு வந்ததும் கலைஞர் ஆட்சியில் தான். ஆனால் இன்றைக்கு டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் குளிரில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் போராட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்மூடித்தனமாக அதிமுக அரசு ஆதரித்து கொண்டுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. அவ்வாறு உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சில இடங்களில் சரியாக செயல்படுவதில்லை. மருத்துவமனை இருந்தால் மருத்துவர்கள் இருப்பதில்லை. மருத்துவர்கள் இருந்தால் மருந்துகள் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகின்றது. அங்கு பணியாற்றுவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் என எதுவும் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பவர்கள் தான் இங்கு வந்து பணியாற்றுவார்கள் என்று அரசு கூறுகின்றது. செந்தில் கவுண்டமணி வாழைப்பழ காமெடி போல மினி கிளினிக் நடந்து கொண்டுள்ளது.
திமுகவின் ஒன்றிணைவோம் திட்டம் மூலம் கட்சி பாகுபாடு இன்றி மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. நம்முடைய அணுகுமுறையை பார்த்து மக்கள் தாமாக வந்து கட்சியில் சேர்ந்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த மண்ணாகும். கலைஞரின் குருகுலம். அந்த ஈரோட்டில் இந்த கூட்டம் நடைபெறுவதை உள்ளதை உள்ளபடியே பெருமை கொள்கிறேன். ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம். இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். அவருக்கு மக்கள் பணி என்றால் பிடிக்காது. அவர் அமைச்சராக இருந்த போது பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.
பஞ்சு விலை உயராத நிலையில், நூல் விலை மட்டும் உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளித்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் பதுக்கல் தான் காரணம் என்று கூறுகின்றனர். திமுக ஆட்சி அமைந்ததும் நூல் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல 100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக ஊதியம் கொடுப்பதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. மேலும் கூலியை அன்றைக்கே, அதே இடத்தில் வழங்கும் சூழல் நிச்சயம் உருவாக்கித் தருவோம்.
ஓய்வூதியம் திமுக ஆட்சியில் கட்சி பாகுபாடின்றி வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகின்றது. இதே போல மாணவர்கள் கல்விக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 6 லட்சம் கோடி தமிழகத்தின் கடனாக உருவாக்கி வைத்துள்ளனர். கல்வி, சுகாதாரம், சமூக நீதி பறிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பெருமைகளை எல்லாம் சீரழித்துக் கொண்டிருக்கிற இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் நீங்கள் எல்லாம் திமுகவை வருகின்ற தேர்தலில் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மேல்சபை எம்பி அந்தியூர் செல்வராஜ், முன்னாள் எம்பி கந்தசாமி, மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் யூனியன் சேர்மன் எல்லப்பாளையம் சிவகுமார், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் எஸ்.எல்.டி சச்சிதானந்தம், திண்டல் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் மணி ராசு, குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்