குழந்தை இல்லாததால் அரசு மருத்துவர் தற்கொலை!

கையில் ஊசி குத்தியபடி, ரத்தம் கொட்டிய நிலையில் மரணமடைந்து இருந்த அவரின் உடலை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2023-03-26 09:03 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை இல்லாததால் மனவேதனையிலிருந்த மருத்துவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார். 32 வயதான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பது சங்கடத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. யாரைப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் இதைப் பற்றியே கேள்வி எழுப்பி வந்திருக்கின்றனர். இதனாலேயே அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணிபுரிந்து வந்திருக்கிறார் சதீஷ்குமார். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையிலும் இவர் மருத்துவராக இருக்கிறார். ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த இவருக்கு உறவினர்களின் ஆறுதல் கிடைக்காததால் மேலும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சதீஷ் குமாரின் மனைவி சந்தியா அம்மா வீட்டுக்கு சென்று விட்டதால் தனிமையிலேயே இருந்திருக்கிறார் மருத்துவர். அவரது தனிமையே அவரை பல விதங்களில் கேள்வி எழுப்பி யோசிக்க வைத்திருக்கிறது. கடைசியாக இரண்டு தினங்களுக்கு முன்னர் வரை சந்தியாவிடம் தொடர்பில் இருந்த சதீஷ், அவ்வப்போது தொலைபேசியில் பேசி வந்திருக்கிறார். ஆனால் சம்பவத்தன்று காலையில் அவரது மொபைல் ஆஃப் செய்து வைத்திருப்பதை அறிந்த சந்தியா, அக்கம்பக்கத்தில் இருக்கும் யாருக்காவது அழைத்து பேச முடிவு செய்திருக்கிறார்.

அருகிலுள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் சதீஷ்குமாரைப் பார்த்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ள அவர்களும் உடனடியாகச் சென்று பார்த்திருக்கின்றனர். சதீஷ்குமார் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. வீட்டின் படுக்கை அறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியிருக்கிறார் மருத்துவர். துரதிஷ்டவசமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையிலேயே மீட்கப்பட்டார்.

கையில் ஊசி குத்தியபடி, ரத்தம் கொட்டிய நிலையில் மரணமடைந்து இருந்த அவரின் உடலை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

குழந்தை இல்லாததால் தூக்கிட்டு இறந்தாரா, இல்லை வேறு காரணமா, மனைவியுடன் இவர் ஏன் செல்லவில்லை, மனைவி சரியாக எப்படி அருகாமை வீட்டில் தகவல் கொடுத்தார் என்பது உட்பட பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News