ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
ஈரோட்டில் சிறுநீரக செயலிழந்து உறுப்புகளை தானம் செய்த தொழிலாளியின் உடலுக்கு ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.;
ஈரோட்டில் சிறுநீரக செயலிழந்து உறுப்புகளை தானம் செய்த தொழிலாளியின் உடலுக்கு ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் ராஜா வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் மணிவண்ணன் (வயது 30). தொழிலாளி. இவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பு அவருடைய குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தொழிலாளி மணிவண்ணனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மணிவண்ணனின் உடல் உறுப்புகள் தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் மையத்தின் வழிகாட்டுதலின் படி தானம் செய்யப்பட்டன.
பின்னர் அவரது உடல் இறுதி சடங்குகள் நிறைவேற்ற குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து உள்ளார். அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலுடன் ஈரோடு கோட்டாட்சியர் சதீஸ்குமார் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், மணிவண்ணனின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். உடன், ஈரோடு வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.