ஈரோடு: ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில வாலிபர் கைது!

ஒடிசாவில் இருந்து ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை ஈரோடு ரயில்வே போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-26 02:30 GMT

ஒடிசாவில் இருந்து ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை ஈரோடு ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒடிசா சாம்பல்பூர்- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்தது. அந்த ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அதில், எஸ்-4 பெட்டியில் சந்தேகப்படும் வகையில் இருந்த வட மாநில வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர்.

சோதனையில், அவர் வைத்திருந்த பையில் 14 பண்டல்களில் 13 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை பிடித்து, ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஒடிசா மாநிலம் மலப்படா பகுதியை சேர்ந்த அபினேஷ் திவாரி (வயது 28) என்பதும், அவர் பலாங்கிரி பகுதியில் இருந்து சேலம் செல்வதற்காக முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்து, அவரிடம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, மேல் நடவடிக்கைக்காக அபினேஷ் திவாரி கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதாவிடம் ஒப்படைத்தனர்.

Similar News