ஈரோடு: ஆடு திருடியவரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த போலீசார்
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் ஆட்டை திருடி செல்ல முயன்ற நபரை பூட்ஸ் காலால் போலீசார் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.;
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு சொந்தமான ஒரு வெள்ளாட்டினை கடந்த 2-ம் தேதி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் திருடிக்கொண்டு செல்ல முயன்ற போது பிடிபட்டார். குமாரை பிடித்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஒருவர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரிக்காமல், பொதுமக்கள் முன்னிலையில் பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை பெற்றுத்தருவதை விட்டுவிட்டு எதற்காக ஈவு இரக்கம் இல்லாமல், ஏன் இப்படி பொதுமக்கள் முன்னிலையில் பூட்ஸ் காலால் எட்டி உதைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.