அருள்வாக்கு பெண் சாமியார் குறித்து ஈரோடு போலீசார் விசாரணை

அன்னபூரணி அரசு அம்மா என்ற திடீர் பெண் சாமியார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரா? என ஈரோடு மாவட்ட காவல்துறை தீவிர விசாரணை.

Update: 2021-12-28 16:15 GMT

அன்னபூரணி.

"அன்னபூரணி அரசு அம்மா" என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திடீர் பெண் சாமியார் அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெறியாளராக இருந்த நிகழ்ச்சியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக கலந்து கொண்டிருந்தார். அதன் பிறகு தற்போது அன்னபூரணி சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகியுள்ளார்.

இந்நிலையில், ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர், திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி அருள் வாக்கு சொல்லவிருப்பதாக போஸ்டர் ஓட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து அன்னபூரணி அம்மா ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஆதிபராசக்தி அன்னபூரணியின் நிகழ்வுகள் ஏதேனும் நடைபெற்றதா? கொரானா விதிமுறைகளைப் பின்பற்றாமல் காவல்துறையினருக்கு தெரியாமல் நிகழ்ச்சிகள் ஏதேனும் நடத்தினரா? என்பது குறித்தும், வேறு ஏதேனும் வழக்குகள் பதியப்பட்டனவா? என்பது குறித்தும் ஈரோடு மாவட்ட காவல்துறையின் சார்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News