ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் கவலைக்கிடம்
ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதியை அவருக்கு மீண்டும் வழங்கப்படாததாலும், குடும்பப் பிரச்சினையின் காரணமாகவும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு அப்போதயை திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வைகோ தனியாக பிரிந்து வந்து மதிமுகவை ஆரம்பித்த போது திமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த கணேச மூர்த்தி வைகோவுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார்.
மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றி வந்த கணேச மூர்த்திக்கு இந்த முறை நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட மதிமுகவில் சீட் ஒதுக்கப்படவில்லை. எனவே மதிமுக தலைமையுடன் அவர் மனக்கசப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, அவர் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் அவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமானது. அவருக்கு வயது 77 என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து உயிர் காக்கும் கருவிகளுடன் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தெரிந்ததும் ஈரோட்டில் உள்ள திமுக ,ம.தி.மு.க, காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது.