ஈரோட்டில் 2வது நாளாக கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு

Erode IT Raid ஈரோட்டில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்தது.;

Update: 2024-01-03 06:30 GMT

ஈரோடு பெரியார் நகரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Erode IT Raid

ஈரோட்டில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் பகுதி சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன்கள் பாலசுப்பிரமணியம், வெங்கடாசலம். இவர்களுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காஞ்சிக்கோவிலில் உள்ள குழந்தைசாமியின் வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடியாக வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் கதவை மூடினர். வீட்டிலிருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதே போல் இவர்களுக்கு தொடர்புடைய ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, ஈரோடு பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர், காஞ்சிக்கோவிலில் உள்ள குழந்தைசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாகச் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் இன்று 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நேற்று நள்ளிரவு விடிய விடிய நடைபெற்ற சோதனையானது தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நீடிப்பதால் ஈரோட்டில் ஒரு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இதைப்போல் நாமக்கல் ஒப்பந்ததாரரின் உறவினர், ரகுபதிநாயக்கம் பாளையத்தில் வசித்து வருபவரின் வீட்டிலும் இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, இது ஈரோடு மாவட்டத்தில் 5வது இடமாக சோதனை நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News