ஈரோட்டில் இன்று முதல் மேலும் 100 தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பனை
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கித் தெருக்களில் இன்று முதல் மேலும் 100 தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழ வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த, தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே காய்கறி, மளிகை பொருட்களை, தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் காய்கறிகள், மளிகை பொருட்கள் முதல் நாளில் 140 வாகனங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், பல்வேறு பகுதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் வருவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 190 வாகனங்களில் காய்கறி, 40 வாகனங்களில் பழங்களும், 20 வாகனங்களில் மளிகை பொருட்கள் என, 250 வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மக்கள் நெருக்கடியாக இருக்கும் பகுதியிலும், தெருக்கள் சந்தைகளில் வசிக்கும் மக்கள் காய்கறிகள் பழங்கள் கிடைக்காமல் அவதி அடைந்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் 100 தள்ளுவண்டிகளுக்கு பாஸ் வழங்கப்பட்டு இன்று முதல் மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கியமான தெருக்கள், வீதிகளில் உள்ள மக்களுக்கு தள்ளு வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் காய்கறிகள், ஆப்பிள், ஆரஞ்சு , வாழை போன்ற பழ வகைகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.