ஆளுங்கட்சி பிரமுகர் அத்துமீறல் எனக்கூறி ஈரோடு காய்கறி சந்தையில் வியாபாரிகள் தர்ணா
ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில், சரக்கு வாகனங்களை உள்ளே விடாமல் திமுக பிரமுகர் அத்துமீறுவதாகக்கூறி நள்ளிரவில் வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு ஆர்.கே.வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறிச்சந்தை, கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் ஈரோடு வ. உ. சி பூங்கா பகுதியில், ரூ.1 கோடி மதிப்பில் தற்காலிக சந்தை கட்டப்பட்டு செயல்பட தொடங்கியது. இந்த சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். சந்தைக்கு தினமும் அதிகாலையில் தாளவாடி ,ஊட்டி, கர்நாடகா,ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் ஏற்றிக்கொண்டு வரும் சரக்கு வாகனங்கள்மட்டுமின்றி ஏராளமான இருசக்கர வாகனங்களும் வந்து செல்வது வழக்கம்.
இங்கு வரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை, திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குறிஞ்சி சிவக்குமார், அருண் பிரசாத் என்ற இரு ஒப்பந்ததாரர்களால் வசூல் செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்ததாரர்கள் கட்டணங்களை இரு மடங்காக உயர்த்தி வசூலிப்பதாக கூறி கடந்த இரு தினஙகளுக்கு முன்பு மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், நள்ளிரவில் இன்று ஒப்பந்ததாரர்கள் மார்க்கெட் நுழைவு வாயில் முன்பு புதுப்புது ஆட்களை வைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே வரவிடாமல் அத்துமீறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு உள்ளே கொண்டு வர முடியாமல், வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், திடீரென மார்க்கெட் வளாகத்திலேயே நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், காய்கறி வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், சுங்கவரி மற்றும் வாகனங்கள் மார்கெட்டுக்குள் உள்ளே அனுமதிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு நள்ளிரவில் பரபரப்பு நிலவியது.