புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

ஈரோடு அமல அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

Update: 2021-04-03 05:14 GMT

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக திகழ்வது புனித வெள்ளி வழிபாடாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வையும், அவர் சிலுவையில் உயிர் விட்ட நிகழ்வையும் நினைவுகூர்ந்து இந்த நாளில் கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்வார்கள். இதை முன்னிட்டு 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதனில் இருந்து தவக்காலம் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. அதில் இருந்து புனித வாரமாக இந்த வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று இயேசுவின் கடைசி இரவு உணவு நிகழ்வை நினைவு கூர்ந்து நற்கருணை நிறுவும் வழிபாடு நடந்தது.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நேற்று மாலை பங்குத்தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ஜான்சன் தலைமையில் நற்கருணை நிறுவும் வழிபாடு சிறப்பு திருப்பலியுடன் நடந்தது. பின்னர் ஆலயத்தில் உள்ள நற்கருணை பேழையில் இருந்து நற்கருணை இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிவரை நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் காலை 6 மணி முதல் தொடங்கின. பகல் 11 மணி வரை மவுன ஆராதனை நடைபெற்றது.

பகல் 11 மணிக்கு இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூர்ந்து சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதில் இருந்து சிலுவையில் தனது உயிரை ஒப்படைத்தது வரை 14 நிகழ்வுகள் இந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் நினைவுகூரப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடந்தது. பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் சிலுவைப்பாதையை வழி நடத்தினார்கள்.

மாலையில் திருச்சிலுவை ஆராதனை வழிபாடு நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை)இரவு 10.30 மணிக்கு இயேசுவின் உயிர்ப்பு (ஈஸ்டர்)பெருவிழா சிறப்பு திருப்பலி வழிபாடுகள் தொடங்குகின்றன. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

Tags:    

Similar News