மருத்துவமனைகளில் தீ விபத்தை தடுப்பது குறித்த கருத்தரங்கு
ஈரோடு மாவட்டத்தில் மருத்துவமனைகளில் நிகழும் தீ விபத்தினை தடுப்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்தினை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் சார்பில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமை தாங்கினார். உதவி தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவமனை நிர்வாகிகள், ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது: மருத்துவமனைகளில் மிகவும் அபாயகரமான விபத்து தீ விபத்து. இரண்டு தளங்களுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளில் தானியங்கி தீயணைப்பு கருவிகள், தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்த உபகரணங்களை மருத்துவமனை நிர்வாகிகள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தை தீ தடுப்பான் கருவியை கொண்டு அணைக்க வேண்டும். தண்ணீரை கொண்டு அணைத்தால் மேலும் மின் கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. மருத்துவமனைகளில் ஜெனரேட்டரில் ஆயில் கசிவால் ஏற்படும் தீயை எக்காரணம் கொண்டு தண்ணீரை பயன்படுத்தி அணைத்தால் மேலும் தீ பரவும். எனவே தீ தடுப்பான் கருவியை முறையாக பயன்படுத்த வேண்டும். அந்த தீ தடுப்பான் கருவியை முறையாக பராமரிக்க வேண்டும் என விளக்கி கூறினார்.
இந்த கூட்டத்தில் ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ், தீயணைப்பு அலுவலர்கள், வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.