ஈரோடு மாநகரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் தளர்வு : மாநகராட்சி ஆணையர்

ஈரோடு மாநகர் பகுதியில் தொற்று குறைந்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகள் அனைத்திற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-07-07 13:00 GMT

ஈரோடு மாநகரில், கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. மாநகராட்சி சார்பில் தினமும் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனையும், தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரம் பரிசோதனை என மொத்தம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இதைப்போல் மாநகராட்சி பகுதியில் உள்ள 1.30 லட்சம் வீடுகளில் வாசிக்கும் மக்களுக்கு காய்ச்சல், சளி, இரும்பல் போன்ற அறிகுறி இருக்கிறதா? என்று கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் 1200 தன்னார்வலர்களும், 200 மாநகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தினமும் வீடுவீடாக சென்று சளி காய்ச்சல் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். இதில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளிலேயே சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும்,  ஒரே தெருவில் மூன்று வீடுகளுக்கு மேல் பாதிப்பு இருந்தால், அந்தத் தெரு தனிமைப்படுத்தப்பட்டு தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலில் மாநகர் பகுதியில், 45 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது மாநகர் பகுதியில் தொற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் மொத்த பாதிப்பில் மாநகர் பகுதியில் மட்டும் 32 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மாநகர் பகுதியில் தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. குறிப்பாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் விரைவாக குணம் அடைந்தனர். இதுபோல் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ததும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

முதலில் தினசரி பாதிப்பு 500-க்கு மேல் இருந்தது. ஆனால் தற்போது மாநகர் பாதிப்பு 32 ஆக குறைந்துள்ளது. இதேபோல் முதலில் மாநகர பகுதியில் 45 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் தளர்வு அளிக்கப்பட்டுவிட்டது.

தற்போது மாநகர் பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் இல்லை. வீடுகளில் மட்டுமே தனிமையில் உள்ளனர். தொற்று குறைந்து வருகிறது என மக்கள் அலட்சியமாக இருக்காமல் தொடர்ந்து வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News