பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் பண்டிகை போனஸ் பேச்சுவார்த்தை உடன்பாடு

ஈரோடு மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்துக்கும், பீடி நிறுவனங்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2021-05-04 12:45 GMT

பீடி சுற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்களுக்கு ரம்ஜான் பண்டிகைக்கு முன் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி, 2020–21ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் இதர கோரிக்கைகளை ஏ.ஐ.டி.யு.சி.,பீடி தொழிலாளர் சங்கம், ஈரோடு மாவட்டத்தில் உளள பீடி கம்பெனிகளுக்கு அனுப்பியது.

தற்போதைய பேச்சுவார்த்தையில், ஈரோடு வி.பி.ஆர்.காலேஜ் பீடி நிர்வாகத்துக்கும், ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அனைத்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கும் இந்தாண்டு அவர்கள் சுற்றிய, 1,000 பீடிகளுக்கு, 26 ரூபாய் வீதம் கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்ட தொகையில், 1,000 ரூபாய் கொரோனா நிவாரண தொகையாக வழங்குவது. ஏற்கனவே வழங்கிய தொகையில், 1,000 ரூபாயை பிடித்தம் செய்திருந்தால், அதனை திரும்ப வழங்க முடிவானது.

குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி, 2021 ஏப்., 1 முதல், 1,000 பீடி சுற்ற, 9.39 ரூபாய் வீதம் பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும். அதனை மே முதல் வாரத்தில் நிலுவையுடன் சேர்த்து வழங்க ஒப்பு கொள்ளப்பட்டது.

ஈ.ஏ.பீரான் பீடி கம்பெனி, இந்தாண்டு போனஸாக, 1,000 பீடிக்கு, 25 ரூபாய் வழங்க முடிவானது. இதன் மூலம், 2,000 தொழிலாளர்கள் பயன் பெறுவர்.இத்தகவலை, ஏ.ஐ.டி.யு.சி., சங்க பொதுச் செயலாளர் எஸ்.சின்னசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News