போக்சோ சட்டத்தில் 2வது முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்: டி.ஐ.ஜி

போக்சோ வழக்கில் இரண்டு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என, கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரித்துள்ளார்.;

Update: 2021-07-22 11:15 GMT

ஈரோட்டில், காக்கும் கரங்கள் குழுக்கள் சார்பில், பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி.

ஈரோட்டில், காக்கும் கரங்கள் குழுக்கள் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

பின்னர் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கோவை ,ஈரோடு, நீலகிரி ,திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில், காவல்துறை செயல்பாடு இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் காக்கும் கரங்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் குழந்தைகள் நலம் சார்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 10 துறைகளைச் சேர்ந்தவர்கள், கிராம பஞ்சாயத்தை சிறந்தவர்கள் தன்னார்வலர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 34 குழுக்களாக இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், போன மாதத்தை விட இந்த மாதம் குறைந்து உள்ளது .இது வரவேற்கத்தக்கது. ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் இன்று, ஒருநாள் குழந்தைகள் நலம் சார்ந்ந பயிற்சி அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்த 34 குழுக்கள் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட இந்த குழு தொடங்கி ஒரு மாதத்திற்குள்ளாகவே 450 கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

இதனால் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஈரோட்டில் 15 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது தயங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க முன்வருகிறார்கள்.

அதேபோன்று கடந்த ஜூன் மாதம் 9 போக்சோ வழக்குகள் பதிவாகின. ஜூலை மாதம் 6 ஆக குறைந்துள்ளது. போக்சோ வழக்கில் இரண்டு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News