ஈரோடு மாநகரில் குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் அபராதம்
ஈரோடு மாநகரில், குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் அபராதம் விதிக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஈரோடு மாநகரில் 60 வார்டுகளிலும் சாலையோரங்களில குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் தங்களது குப்பைகளை கொட்டி வந்தனர். இதில் மக்கும் கப்பைகள் மக்காத குப்பைகள் என பிரிக்கப்படாமல் அனைத்தும் ஒன்றாக கொட்டுவதால் இதனை பிரிக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் மாநகர் பகுதி முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 200 குப்பைத் தொட்டிகள் கடந்த ஆண்டே அகற்றப்பட்டு விட்டன. இதனை தொடர்ந்து பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் இதன்படி மக்கள் குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கினர்.
ஆனால், தற்போது பல்வேறு இடங்களில் அவ்வாறு குப்பைகள் பிரித்துக் கொடுப்பது இல்லை. அப்படியே கொண்டு போய் போட்டு விடுகின்றனர். இதன் காரணமாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தராத வீடுகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.