ஈரோட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை: மாவட்ட நிர்வாகம் தலையிடுமா?

ஈரோட்டில், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அனுமதிக்க முடியாமல் திருப்பி அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Update: 2021-05-12 00:26 GMT

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி, 4,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட அளவில் அரசு, தனியார் மருத்துவமனை, கொரோனா கேர் சென்டர்களில், 3,840 படுக்கைகள் உள்ளன. இதில், ஈரோடு அரசு மருத்துவமனையில்109, பெருந்துறை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 460 பேர் மற்றும் பிற இடங்களிலும் சேர்த்து, 3,500 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். 2,500க்கும் மேற்பட்டோர் கொரோனா மற்றும் சில அறிகுறியுடன் வீடுகளில் தனிமையில் உள்ளனர்.

இதில், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன. மற்ற இடங்களில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் இருந்தால், அவர்களை எங்கு படுக்கை வசதி உள்ளதோ, அங்கு மாற்றுகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரில் பலருக்கு இயற்கையாக சுவாசிக்க முடியவில்லை என்றும், ஆக்சிஜன் தேவை என்றும் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு கேட்பவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதால், தட்டுப்பாடு ஏற்படுகிறது.

ஈரோட்டில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவசர மற்றும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்க முடியாமல்  நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றனர். இதுபற்றி, தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் அரச்சலுார் என இரு இடங்களில், 33 டன் வரை ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இதில், 30 டன் அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ள, 3 டன் தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்படுகிறது. சமீபகாலமாக ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதுடன், பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வைத்தால் சிறந்தது என நினைக்கும்போது, அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குகிறோம்.

ஆனால் தேவையான அளவு எங்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதுவரை 17 கிலோ எடை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் 700 முதல் 900 ரூபாய்க்கு விற்ற நிலை மாறி தற்போது 1,500 முதல் 1,650 ரூபாய்க்கு விற்கின்றனர். வெளிச்சந்தையில் இதைவிட கூடுதல் விலைக்கும் ஆக்சிஜன் வாங்க தயாராக உள்ளனர். இந்நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News