எல்லையில் பெயர் பலகை உடைப்பு: ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
கன்டை சலுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ், மற்றும் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.;
ஈரோடு தமிழக எல்லைப் பகுதியில் இருந்த தமிழக அரசின் பெயர் பலகையை கன்டை சலுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ், மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த சில நாட்கள் முன்பு உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.அதன்படி இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு குறிஞ்சி தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். இஸ்லாமிய ஜனநாயக பேரவை ஜாபர் , தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், தமிழ்நாடு மக்கள் மன்றம் ரவிச்சந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தமிழ் குமரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், புரட்சிகர இளைஞர் முன்னணி ஜெயப்பிரகாசம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சித்திக், சலீம் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கன்டை சலுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ், மற்றும் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர்.