நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி : எம்பி சுப்ராயன்
நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன் குற்றச்சாட்டு.
ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏஐடியுசியின் தமிழ்நாடு உள்ளாட்சிதுறை பணியாளர் சம்மேளத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ராயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் மக்களின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறார்கள் என்றார். மோடி அரசு மடியில் கணம் இருப்பதால் வழியில் பயப்படுவதாக தெரிவித்த சுப்பராயன் , மத்திய அமைச்சரவை மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக நடப்பதால் ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது என்றும் ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் கூறிய அவர் நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி என்றும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய சுப்ராயன், மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்கதக்கது என்றும் இத்திட்டத்தில் பயன்படுத்தும் ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். முறைகேடுகளை செய்வதற்காகவே திட்டங்கள் தீட்டிய அரசு அதிமுக அரசு என்று குற்றம் சாட்டிய அவர் ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை தமிழக அரசு நிறுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சிகளில் பணிகளை தனியாருக்கு தமிழக அரசு கொடுக்கக்கூடாது என்றும் எம்.பி.சுப்பராயன் கேட்டுக்கொண்டார்.