சாலை விரிவாக்கம், காவல்நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர் ஆய்வு
சாலை விரிவாக்கப்பணிகள் மற்றும் காவல்நிலையம் மாற்றி அமைப்பது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைத்திடும் வகையில், அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் மேம்பாலத்தின் ஒரு பகுதி அரசு தலைமை மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ளதால், அப்பாதை மிகக் குறுகிய நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியும் வருகின்றனர். எனேவ இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், எஸ்.கே.சி சாலையை விரிவுபடுத்துவது தொடர்பாக அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், சாலையை அகலப்படுத்தும் போது மருத்துவமனை வளாகம் பாதிக்கப்படும் என்பதால் அதற்கான மாற்று வழிகள் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் உள்ள காவல்நிலையத்தை மாற்றி அமைப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.