செப்.19ல் மெகா தடுப்பூசி முகாம் : ஈரோடு மாநகரில் 60 வார்டுகளும் தயார்

வரும் 19ம் தேதி மெகா தடுப்பூசி முகாமையொட்டி ஈரோடு மாநகரில் 60 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-17 12:45 GMT

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில், ஏற்கனவே கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதன் மூலம் ஈரோட்டில் 847 மையங்களில் 97, 198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 67 மையங்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுகிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 548 மையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர் பகுதிகளில் உள்ள 60 வார்டுகளிலும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. தினமும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

வரும் 19 ஆம் தேதி இரண்டாவது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் 19ஆம் தேதி ஈரோடு மாநகர் பகுதிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளது. ஒரு வார்டுக்கு ஒரு தடுப்பூசி முகாம் என்ற அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். மேலும் 4 சிறப்பு மையங்களிலும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் மொத்தம் 64 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும். இதில் 17,500 மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கோவிஷில்டு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போடப்படும். இதுவரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News