தேர்தலையொட்டி தலைவர்கள் உருவம் மறைக்க சுண்ணாம்பு
தேர்தலையொட்டி தலைவர்கள் உருவ படங்களை மறைப்பதற்கு பதிலாக சுண்ணாம்பை ஊற்றிய சம்பவம் ஈரோட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலையொட்டி தலைவர்கள் உருவ படங்களை மறைப்பதற்கு பதிலாக சுண்ணாம்பை ஊற்றிய சம்பவம் ஈரோட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டால், அரசியல் கட்சி சார்ந்த தலைவர்களின் சிலைகள், அரசியல் சார்ந்த கல்வெட்டுகள், கொடிக்கம்பங்கள் உள்ளிட்டவற்றை மறைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாக உள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கதிரவன் உத்தரவின்பேரில் பொது இடங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் அடையாளங்களை மறைக்கும் பணி நடைபெற்றது. இவ்வாறு அரசியல் கட்சி அடையாளங்களை மறைப்பதாக கூறி காந்தி, நேரு, காமராஜர், அப்துல்கலாம் ஆகியோரின் உருவப்படங்கள் மீது சுண்ணாம்பை கரைத்து ஊற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், ஈரோடு மாநகராட்சி எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூட மதில் சுவரில் வரையப்பட்டு உள்ள தலைவர்களின் உருவப்படங்களை மறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. படங்களை மறைக்காமல், ஓவியத்தின் மீது சுண்ணாம்பை கரைத்து ஊற்றி தலைவர்களுக்கு அவமரியாதை செய்வது போல செய்து இருக்கிறார்கள். காந்தி, நேரு, காமராஜர், அப்துல்கலாம் ஆகியோரின் படங்கலின் மீது சுண்ணாம்பு ஊற்றப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்கு உரியது.இந்த செயலுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.