முகநூல் பழக்கம்! பறிபோன வாழ்க்கை!!

பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்வதாக கூறி சீரழித்து விட்டார் என வாலிபர் மீது இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்

Update: 2021-04-17 06:43 GMT

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ராஜம் (வயது 22) என்ற பெண்(பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது), ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2018 ஆம் ஆண்டு பேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளம் மூலம் தீனதயாளன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் தீனதயாளனிடம் வேலை கேட்டு இருந்தேன். அவர் திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறினார்.

இதை தொடர்ந்து நான் திருப்பூருக்கு சென்றேன். தீனதயாளன் என்னை அழைத்துக் கொண்டு பெருமாநல்லூர் நேதாஜி அப்பேரல் பார்க் என்ற இடத்தில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்த்துவிட்டார். நான் அந்த கம்பெனியின் மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தேன்.

இந்நிலையில் தீனதயாளன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும் வெளியில் வீடு பார்த்து உள்ளதாகவும் கூறினார். இதனால் நான் விடுதியை காலி செய்து அவருடன் ஒரே வீட்டில் தங்கினேன். திருமணம் ஆகாமல் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் தீனதயாளன் என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார். நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அதற்கு என் பெற்றோர் சம்மதம் வேண்டும் என்று கூறி ஆறு மாதம் தட்டிக்கழித்து வந்தார். என் தங்கை வாழாமல் பெற்றோர்களுடன் இருப்பதாகவும் அவர் விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்த பிறகுதான் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என எனது பெற்றோர்கள் தெரிவித்து விட்டதாக என்னிடம் கூறினார். நானும் அதற்கு சரி என்று கூறிவிட்டேன். பின்னர் தீனதயாளன் வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே வந்து செல்வார்.

இந்நிலையில் நான் கர்ப்பம் ஆனேன். தீனதயாளனிடம் இது குறித்து கூறி என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தினேன். அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து நான் கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். உடனே தீனதயாளன் அவரது பெற்றோர் என்னை தடுத்து நிறுத்தி திருமணம் செய்து வைப்பதாக உறுதி கூறினார்கள். உங்கள் திருமணம் நடைபெற வேண்டுமானால் கர்ப்பத்தை கலைத்து விட்டு வர சொன்னார்கள்.

இதையடுத்து தீனதயாளன் தாய் ஒரு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று கருவை கலைக்க வைத்தார். பின்னர் ஓட்டு போடுவதற்காக என்னை எனது ஊருக்கு அனுப்பி வைத்தார். தேர்தல் முடிந்து மீண்டும் அவங்க ஊருக்கு சென்றபோது, வரக்கூடாது என தீனதயாளன் மற்றும் அவரது பெற்றோர்கள் என்னை மிரட்டி, என் மகன் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டான் எனவும் கூறி துரத்தி விட்டனர்.

இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். என்னை திருமணம் செய்வதாகக் கூறி கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்து எனது கருவை கலைத்த எனது கணவர் மற்றும் கணவரின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News