ஆறு கேஸ் சிலிண்டருக்கு 3,000 முதல், 3,500 ரூபாய் தான் அரசுக்கு செலவாகும். இத்தொகையை அரசு எளிதில் வழங்க முடியும் என்பதால் இத்திட்டம் சாத்தியமானது தான் என ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் யுவராஜா பிரச்சாரத்தில் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் எம்.யுவராஜா, என்.ஜி.ஜி.ஓ., காலனி, காந்தி நகர், உழவன் நகர், கிராமடை, வீரப்பன்சத்திரம், தெப்பக்குளம் வீதி என பல்வேறு பகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். இதில் வாக்காளர்களிடம், வேட்பாளர் யுவராஜா பேசியதாவது:அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அம்மா இல்லம் திட்டத்தில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டித்தரப்படும். குலவிளக்கு திட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம், 1,500 ரூபாய், பொங்கல் பரிசாக வழங்கப்படும்.ஆண்டுக்கு, 6 இலவச சிலிண்டர் வழங்கப்படும், என அறிவித்துள்ளனர்.
இதில், ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்க முடியுமா, என கேட்கின்றனர். தற்போது ஒரு சிலிண்டர், 850 ரூபாய்க்கு வாங்குகிறோம். இதில் மத்திய அரசு மானியத்தொகையாக, 40 முதல், 80 ரூபாய் நமது வங்கி கணக்கில் செலுத்துகிறது. மாநில அரசு மொத்தமாக கொள்முதல் செய்வதாலும், மாநில அரசு வரி நீக்கத்தால் மேலும் விலை குறையும். ஆறு சிலிண்டருக்கு 3,000 முதல், 3,500 ரூபாய் தான் அரசுக்கு செலவாகும். இத்தொகையை அரசு எளிதில் வழங்க முடியும் என்பதால் இத்திட்டம் சாத்தியாமான ஒன்று தான். எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.