ஈரோட்டில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

ஈரோட்டில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பறிமுதல்.;

Update: 2021-09-14 11:15 GMT

ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள சைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் உணவகம் குறிப்பாக அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள சைவ உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள அசைவ உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டதில் பதப்படுத்தப்பட்ட 8 கிலோ இறைச்சிகள், அதாவது முந்தின நாள் இரவே சமைத்து அதை பிரிட்ஜில் வைத்து காலையில் மீண்டும் சூடுபடுத்தி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் 10 கிலோ கெட்டுப்போன உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவை குப்பையில் போட்டு அழிக்கப்பட்டன. தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் கூறியதாவது:-

உணவு ஆணையாளர் மற்றும் ஈரோடு கலெக்டர் உத்தரவின் பேரில் உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அசைவ உணவக கடையில் சோதனை செய்த போது முந்தின நாள் இரவு சமைத்து பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட இறைச்சிகள் மீண்டும் இன்று காலை சூடுபடுத்தி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உணவகத்தில் உள்ளவர்கள் இறைச்சிகளை வாங்கி அதை பாத்திரத்தில் வைக்கும் போது பாத்திரத்தில் வாங்கின தேதி, நேரம் எழுதி வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த இறைச்சிகள் கெட்டுப்போன இறைச்சிகளாக கருதப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

மேலும் அசைவ உணவகத்தில் கலர் பொடியை அதிக அளவு சேர்த்து வருகின்றனர். கலர்பொடி சேர்ப்பது உடம்புக்கு கேடு விளைவிக்கும். இறைச்சியை 0 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை ப்ரிட்ஜில் வைக்கலாம். முதலில் தவறு செய்யும் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் மீண்டும் அதே தவறை செய்தால் அபராதம், உள்பட பல்வேறு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News