ஈரோடு கறவை மாட்டு சந்தை: வெளி மாநில வியாபாரிகள் வராததால் விற்பனை சரிவு

கொரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் தொடர்ந்து 4 -வது வாரமாக சந்தைக்கு வராததால் விற்பனையில் சரிவு ஏற்பட்டது

Update: 2021-09-23 10:45 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி, நாமக்கல், கரூர்,சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

இங்கு வரத்தாகும் மாடுகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம். கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த மாட்டுச் சந்தை கடந்த செப்டம்பர் 2-ம் தேதி முதல் அரசு பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் இயங்கி வருகிறது.

முதல் வாரத்தில் 150 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. 2 -வது வாரத்தில் 300 மாடுகள் விற்பனைக்கு வந்தன. மூன்றாவது வாரத்தில் 450 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இந்நிலையில், இன்று கூடிய சந்தையில் கடந்த 3 வாரத்தை காட்டிலும் மாடுகள் வரத்து அதிகரித்திருந்தது. அதன்படி, பசு-350, எருமை-200, கன்று-50 என மொத்தம் 600 மாடுகள் வரத்தானது. இதில், பசு ரூ.30ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரையும், எருமை ரூ.30ஆயிரம் முதல் ரூ.45ஆயிரம் வரையும், கன்று ரூ.10ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரையும் விற்பனையானது. மாடுகளை மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து வாங்கி சென்றனர்.

கொரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் தொடர்ந்து 4 -வது வாரமாக இன்றும் சந்தைக்கு வர வில்லை . வழக்கமாக,  கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து அதிக அளவில் மாடுகளை வாங்கிச் செல்வார்கள். கொரோனா தாக்கம் காரணமாக இந்த மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாகவே  இருந்ததாக மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News