டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த ஈரோடு மாநகராட்சி உத்தரவு

மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்த சுகாதார ஊழியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு

Update: 2021-08-19 10:45 GMT

ஈரோடு மாநகராட்சியை பொறுத்தவரை 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் கொரோனா தோய்த்தொற்று தடுப்பு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரப்பிரிவு ஊழியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சாக்கடை அடைப்புகள் சுத்தம் செய்தல், குப்பைகள் அகற்றுதல், மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களை கண்டறிந்து வடிகால்களை அமைத்தல், பொதுமக்களுக்கு டெங்கு பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், 20 நாட்களில் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒரே நேரத்தில் வார்டு வாரியாக தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சாக்கடை தூர்வாருதல், கொசு மருந்து அடித்தல், சாலையோர குப்பைகளை அகற்றும் பணியினை மேற்கொண்டனர்.

குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு காலி டப்பா, தேங்காய் ஓடு ஆகியற்றை அப்புறப்படுத்தியதுடன் பொதுமக்களுக்கும் அறிவுரைகளை வழங்கினர். தினமும் காலை நேரத்தில் வழக்கமான தூய்மை பணிகளை முடித்த பின் ஒவ்வொரு வார்டு வாரியாக குழுவாக சென்று டெங்கு ஒழிப்புக்கான பணிகளை தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News