ஈரோடு மாநகராட்சி பகுதியில் 5 சதவீதமாக குறைந்த பெருந்தொற்று
ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மாநகர் பகுதியில் மேற்கொண்ட தொடர் தடுப்பு நடவடிக்கையால், கொரோனா தொற்று 5 சதவீதமாக குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் இதுவரை 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 1650 பேர் வரை புதியதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 686 ஆக குறைந்துள்ளது.
இதேபோல், ஈரோடு மாநகராட்சி பகுதியில், மக்கள் தொகை அடர்த்தி காரணமாக அதிக அளவில் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் மாநகராட்சி சார்பில் வீடு வீடாக பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கையால், தொற்று பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 1200 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 100-க்கும் குறைவாக உள்ளது. தொற்று பாதிப்பு சதவீதத்தில் 29 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
தொற்று பரவல் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்ற போதும், இன்னும் 15 நாட்களில் நல்ல முன்னேற்றத்தை எட்டிவிட முடியும். பொதுமக்கள் தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியற்றின் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள முடியும். மாநகர பகுதியில் சுழற்சி முறையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு, ஆணையாளர் இளங்கோவன் கூறினார்.