ஈரோட்டில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிரது: மாநகராட்சி கமிஷனர்
ஈரோடு மாநகராட்சியில், இரண்டு நாட்களாக 1000 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை. நகரில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது என்று, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.;
கொரோனா பரவலை தொடர்ந்து, ஈரோடு பஸ் நிலையத்தில் தற்போது காய்கறி மார்க்கெட் தற்காலியமாக மாற்றப்பட்டு, மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. இங்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் நிலையத்திற்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.
பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் காய்கறி வியாபாரிகளுக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று கூறியதாவது:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகர் பகுதி முழுவதும் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்கறி சந்தைகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டது.
வியாபாரிகள் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக 1000 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வந்துள்ளன. இதில், பரிசோதனை செய்து கொண்ட வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இது, ஈரோட்டில் கொரோனா தாக்கம் மாவட்டத்தில் குறைந்து வருவதை காட்டுகிறது. இன்னும் கொரோனா பரிசோதனை செய்யாத வியாபாரிகளுக்கு பஸ் நிலையத்திற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக அருகில் முகாமில் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.