ஈரோடு மாநகராட்சி வேகம்: மாநகரில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு

ஈரோடு மாநகராட்சி மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, மாநகர் பகுதிகளில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது.

Update: 2021-06-10 15:18 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை அதிவேகமாக பரவியது.  மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்த போதும், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் தொற்று வேகமாக பரவியது. முதலில் 600 பேர் வரை பாதிப்பு இருந்தது.

இதையடுத்து, ஈரோடு மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 10 நடமாடும் வாகனங்கள் மூலம், கொரோனா அதிகம் தாக்கமுள்ள பகுதியில் தினமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும்  4ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வீடுவீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் 200 பேர், தன்னார்வலர்கள் ஆயிரத்து 200 பேர் நியமிக்கப்பட்டு, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 1.30 லட்சம் வீடுகள் இவர்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர். மேலும், மாநகராட்சி சார்பில் 10 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் லேப் டெக்னீசியன்கள் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். தினமும் இதுபோன்று 400 பேருக்கு நடமாடும் ஆட்டோ மூலம் லேப் டெக்னீசியன்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சி மேற்கொண்ட இதுபோன்ற அதிரடி நடவடிக்கையால், தற்போது மாநகர் பகுதியில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் மாநகர் பகுதியில் 270 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து, மக்களும் ஒத்துழைப்பு தந்தால், விரைவில் கொரோனா இல்லாத ஈரோடு மாநகரம் சாத்தியமே.

Tags:    

Similar News