ஈரோட்டில் வலம் வரும் 'கொரோனா ஆட்டோக்கள்'! வீடுகளுக்கே சென்று பரிசோதனை!
ஈரோடு மாநகர் பகுதிகளில், வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்காக, டெக்ஷீயன்களுடன் கூடிய ஆட்டோக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச்சென்று சளி,காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்ததாவது: கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாநகராட்சி முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர் பகுதிகள் முழுவதும் நேரிடையாக வீடு வீடாகச் சென்று சளி காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு கணக்கெடுப்பின் போது சளி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த நபரின் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஒரு ஆட்டோ, ஒரு லேப் டெக்னீசியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர் பகுதி முழுவதும் செல்லும் வகையில் 10 ஆட்டோக்கள் மற்றும் 10 லேப் டெக்னீஷியன்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் சளி, காய்ச்சல் உள்ள நபர்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.