ஈரோட்டில் விதிமீறல்: 150 பேருக்கு அபராதம் - 50 வாகனங்கள் பறிமுதல்

ஈரோட்டில், முழு ஊடரங்கின்போது வெளியே சுற்றிய 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது; 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-04-26 09:39 GMT

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 20ஆம் தேதி முதல்,  இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  இரவு 10 மணி முதல் , அதிகாலை 4 மணி வரை, இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவுநேர ஊரடங்கில் மட்டும் தேவை இல்லாமல் வெளியே சுற்றியதாக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கின் போது அனாவசியமாக சாலையில் நடமாடினாலோ, வாகனங்களில் சுற்றினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்காக ஈரோடு மாவட்ட ,மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், சென்னிமலை ரோடு, காளைமாடு சிலை, மணிக்கூண்டு பஸ் நிலைய பகுதி, கருங்கல்பாளையம் காவிரி கரை சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதைப்போல் மாவட்டம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவையும் மீறி ஒரு சிலர் ரோடுகளில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தேவையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். அதேநேரம் அவசர தேவைக்கு சென்றவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

நேற்று, ஈரோடு மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை மீறியதாக 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News