'நஷ்டம்யா..நஷ்டம் ;பஸ்சை இயக்க முடியலை' தனியார் பஸ் உரிமையாளர்கள் புலம்பல்

கொரோனா காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.;

Update: 2021-04-27 12:00 GMT

தனியார் பஸ் 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி கடந்த 20ஆம் தேதி முதல், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பஸ் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 11 பணிமனைகளில் 730- பஸ்கள்  உள்ளூர், வெளியூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் வெளியூர்களுக்கு என 269 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவைகள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை  இயக்கப்பட்டு வந்தன. ஈரோடு மாவட்டத்திலிருந்து சேலம் ,திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, மேட்டூர், கோவை, பழனி போன்ற ஊர்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே தனியார் பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தொற்று வேகம் எடுத்து வருவதால் பஸ்களில் பயணம் செய்வதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை.

இதனால் காலை நேரங்களில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படும் தனியார் பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கிறது. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் 70 சதவீத தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்வு, பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஊதியம் கொடுக்க சிரமப்பட்டு வருவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News