முக கவசம் அணியாத 560 பேருக்கு அபராதம்

ஈரோடு மாநகர் பகுதியில் 2 நாட்களில் முக கவசம் அணியாத 560 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுளளது.;

Update: 2021-03-21 16:36 GMT

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்து ஆயிரத்தை கடந்து விட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கதிரவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்தார். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு தலா ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். அதன்படி கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 560 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும், கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான இளங்கோவன் கூறியதாவது:-

மாவட்ட கலெக்டர் உத்தரவு படி மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். முதலில் அதிகளவு பொது மக்கள் முக கவசம் அணியாமல் வந்தனர். ஆனால் தற்போது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முக கவசம் அணியும் பழக்கமும் அதிகரித்து உள்ளது. இது நல்ல விஷயம் தான். பொதுவாக முக கவசம் அணிந்தால் எந்த ஒரு கிருமியும் நம்மை அண்டாது. தற்போது ஈரோடு மாநகராட்சி பகுதியில் 100 -க்கு 99 சதவீதம் பேர் முக கவசம் அணிந்து வருகின்றனர். இதைப்போன்று மாநகராட்சி பகுதியில் அதிகாரிகள் கடைகள் வணிக நிறுவனங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ. 500 முதல் 5000 வரை அபராதம் விதித்து வருகின்றனர். சில கடைகள் பூட்டியும் சீல் வைக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முறைகளை தொடர்ந்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். முகக் கவசம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News