கொரோனா விதிமீறல்: 2 ஆயிரம் பேருக்கு அபராதம்

ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரம் பேருக்கு அபராதம்.;

Update: 2021-03-20 02:12 GMT

இந்தியாவில் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று மட்டும் தினசரி பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி விட்டது. தமிழகத்தில் தற்போது படிப்படியாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து அந்தந்த மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து வராதவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினர், வருவாய்த்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆங்காங்கே திடீர் ஆய்வு மேற்கொண்டு அவர் வசித்து வருகின்றனர். இதேபோல் தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான கதிரவன் மாவட்டம் முழுவதும் ஜவுளி நிறுவனங்கள் உணவகங்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு தலா ரூ. 500 முதல் 5000 வரை அபராதம் விதித்து வருகிறார். சில கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மட்டும் முகக் கவசம் அணியாமல் வரும் 500 நபர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோட்டில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக அதிரடியாக கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் என 2,152 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் இதைப்போன்று தினமும் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News