கொரோனா பீதி : ஈரோடு ஜவுளி சந்தை அடியோடு பாதிப்பு

கொரோனா பீதியால் வெளிமாநில வியாபாரிகள் வருகையின்றி ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு.

Update: 2021-04-27 15:11 GMT

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகின்றது. நிரந்தர ஜவுளிக்கடைகள் மற்றும் வாரச்சந்தை கடைகள் என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றது. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கும் ஜவுளி சந்தையானது செவ்வாய்கிழமை மதியம் வரை நடைபெறுவது வழக்கம். வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கா்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டு ஜவுளி சந்தையில் கொள்முதல் செய்வது வழக்கம்.

கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் கெடுபிடிகளால் ஜவுளி சந்தையில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரங்களில் ஜவுளி சந்தை கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை ஜவுளி சந்தை தொடங்கியது. வெளிமாநில வியாபாரிகள் வரத்து இன்றி மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.

இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- வழக்கமாக ஜவுளி சந்தையானது திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்கிழமை பகலில் முடிவடையும். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று இரவு சந்தை நடைபெற மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. இதனால் வேறுவழியின்றி இன்று பகலில் தான் கடைகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொரோனா பீதி காரணமாக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. சில்லரை வர்த்தகம் மட்டும் குறைந்த அளவில் நடந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் காலத்தில் பறக்கும்படை அதிகாரிகளின் கெடுபிடிகளால் ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்து நிலைமை சரியாகும் என்றிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் வியாபாரத்தை முற்றிலும் முடக்கிவிட்டது. தொடர்ந்து இந்த வாரம் மொத்த ஜவுளி வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளிகள் நுகர்வை பொருத்து தான் உற்பத்தியும் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

Tags:    

Similar News