வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறுக: ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்கள் பங்கேற்றன.
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில், அனைத்து தொழிற்சங்கம் சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தற்சார்பு விவசாய சங்கத்தின் தலைவர் பொன்னையன், தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் துளசி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப வரவேண்டும். மின் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் 7 மாதமாக போராட்டம் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தொழிலாளர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் தங்கராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் பொன் பாரதி உட்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.