ஈரோடு: அதிமுக சார்பில் நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்கு ஈரோட்டில் அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கொரோனா நோய்ப்பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுன் கூடிய ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், விமர்சையாக நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால், வழக்கம் போல் கோலாகலமாக சுபகாரியங்கள் நடைபெறாததால் நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் வேலையின்றியும், வருவாயின்றியும் முழுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இத்தகைய நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்கு உதவிடும் பொருட்டு, ஈரோடு பெரியார் நகர் அதிமுக சார்பில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் மூலம் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் மற்றும் உதவியாளர்கள் அரிசி, உப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், கொரோனா பாதிப்பில் இருந்து ஈரோடு மாவட்டமும், தமிழகமும், நாடும் விடுபட வேண்டும் என்பதற்காக, தவில், நாதஸ்வர வாத்ய இசைக் கலைஞர்கள், தங்களது வாசிப்பின் மூலம் சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.