ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 2000க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் பிரதான தொழிலாக ஜவுளி தொழில் விளங்கி வருகிறது. இதற்கு அடிப்படை தேவையான நூல் விலை கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து 30 முதல் 40 சதவீதம் உயர்ந்து வருவதால் , ஜவுளி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடையடைப்பு போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் பங்கேற்றுள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கடையடைப்பு நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளதால் நல்ல முடிவு எடுத்து தருகிறோம் என கூறியதால் கடையடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் தங்களது கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாததால் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ள ஜவுளி தொழிலை காப்பாற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.